“செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் இல்லாமல் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்” என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடங்கிய நிலையில், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பிய நிலையில் தான், “ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்” என்று, கடந்த மாதம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அத்துடன், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பெரும்பாலன ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த உள்ளனர்.

மேலும், “தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் கடந்த 9 ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும்” என்று, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தான், தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் தொற்று சற்று குறைந்து வருவதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கப்பட்டு வருகின்றன. 

அதன் படி, தமிழக அரசும் நாளை மறு நாள் முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பள்ளி, கல்லூரிகளை திறக்க திட்டமிட்டு உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன. 

பள்ளி, கல்லூரிகளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை தமிழக அரசு கடந்த வாரம் விரிவாக அனுப்பி வைத்தன. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி, அரசுக் கல்லூரி, அரசு ஐடிஐ மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் புகைப்படத்துன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்” என்று, கூறியுள்ளார். 

மேலும், “கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படும் வரை, மாணவர்கள், தங்கள் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் செல்லும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது” என்றும், அந்த அறிக்கையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.