“அதிமுக தொண்டர்களே, இந்த தலைமை தேவையா?” என்று கேள்வி கேட்டு, கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கைவிட்டது முதல், அவர்களுக்கு இது போதாத காலமாகவே இருந்து வருகிறது. இதனால், அதிமுகவின் முக்கய தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்ததும், அந்த கட்சியில் அடிமட்ட தொண்டர் வரை அசைத்து பார்த்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக,  தமிழகத்தையே நடுநடுங்க வைத்த கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்றுக்கொண்டிருக்கிறது.

இப்படியான சூழலில் தான், அதிமுகவில் அடுத்த அதிரடி அரங்கேறி இருக்கிறது.

அதாவது, முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த போது, கூட்டணி மூலமாக 23 தொகுதிகளை பெற்ற அன்புமணி, ஓபிஎஸ் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார் என்றும், கூட்டணியில் பாமக இல்லையென்றால் 20 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று அவர் கூறுகிறார்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“முதலில் போட்டியிட்டு 18 இடங்களில் தோல்வி அடைந்ததை பற்றி ஆய்வு செய்ய வேண்டும்” என்றும், அவர் குரல் கொடுத்தார்.

அத்துடன்,  “ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால் தான், அதிமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யானார் என்றும், பாமக சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது” என்றும், அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி அதிரடியாக நீக்கப்பட்டார். 

மேலும், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகியதாக” அவர் மீது அவரது கட்சியின் தலைமை குற்றச்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து சசிகலா, புகழேந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். “புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கியது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும்” அவர் கூறினார்.

இந்த நிலையில் தான், கோவை நகரில் புகழேந்தி புகைப்படத்தை பதிவிட்டு பல வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. 

அதில், “அனாதை கட்சியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்?, கூட்டணி கட்சிகளின் அவமானப்படுத்தி பேசுவதா? இதனை கண்டித்தால் கட்சியில் இருந்து நீக்குவதா? மானமிகு தொண்டர்களே இந்த தலைமை இன்னும் தேவையா?” என்று, அந்த போஸ்டர்களில் பல கேள்விகளை எழுப்பி வாசகங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த போஸ்டரை பார்த்த கோவை அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, இந்த போஸ்டர் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.