உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அறிவித்து, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் பொதுமுடங்கம் அமலில் உள்ள நிலையில், இந்த பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இதனால். தற்போதைய நிலை குறித்து பல்கலைக்கழக மானியக்குழு குஹாத், என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.



இதனையடுத்து, அந்த கமிட்டி பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியக்குழு பிறப்பித்துள்ள உத்தரவில், நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 1 முதல் 31 ஆம் தேதி வரையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும், வாரத்திற்கு 6 நாட்கள் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்தலாம் என்றும், மே 15 ஆம் தேதி முதல் ஆன்லைனில் பிராஜக்ட் உள்ளிட்ட உள் மதிப்பீட்டை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக, நடப்பு கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வை, ஜூன் மாத கோடை விடுமுறைக்குப் பிறகு, அதாவது ஜூலையில் நடத்தி முடித்து, ஆகஸ்டு மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கவும் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கலாம் என்றும், பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

மேலும், ஊரடங்கு முடிந்த பின் நடைபெறும் தேர்வுகளுக்கான நேரத்தை, 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

கல்லூரியின் முதல் மற்றும் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டர் உள் மதிப்பெண் (internal marks) அடிப்படையிலும், மீதமுள்ள 50 மதிப்பெண்கள் அதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வழங்கலாம் என்றும், அந்த கமிட்டி, பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், நடப்பு கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வை, ஜூன் மாத கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நடத்தி முடிக்கலாம் என்றும், அதன்பிறகு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளைத் தொடங்கவும், குஹாத் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.