திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதாக மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த வாரம் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால், திருச்சி அடுத்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து பல மணி நேரம் ஆன பிறகும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள திமுகவினர், தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விளாத்திகுளம் பகுதியில் 3 வாக்குப் பெட்டிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “திமுக வெற்றியைத் தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. ஆனால், இன்று அதனை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.