தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்ட தினத்தில் நிகழ்ந்த விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக பிறந்த 2020 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியில் வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குச் சின்னதாக ஒரு கரும் புள்ளி வைத்தார்போல், அன்றைய தினம் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

14 dead in road accident in TN on Newyear

குறிப்பாக, சென்னையில் நிகழ்ந்த விபத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், அவர்களது உறவினர்கள் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் சோகத்தில் மூழ்கினர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 24 வயதான விக்னேஷ் ஷாவும், அவரது நண்பர் 26 வயதான சங்கர் ஷாவும் நள்ளிரவில் தங்களது காஞ்சிபுரம் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு, அதிகாலை நேரத்தில் சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, லாரி மோதி இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த அவர்களது நண்பர்கள் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் தங்கவேல், தனது 2 நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட டூவிலரில் தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, தாம்பரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பேருந்து மீது மோதி உள்ளனர். இதில் தங்கவேல் பலியானார். அவரது 2 நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஆகாஷ், டூவிலரில் வந்துகொண்டிருக்கும் போது, எதிரே வந்த டூவிலருடன் நேருக்கு நேர் மோதியுள்ளார். இதில், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதான சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

14 dead in road accident in TN on Newyear

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சங்கர், சென்னையில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, புழல் சிக்னல் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் அண்ணன் தம்பி உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். 

மேலும் கோவையில் 2 பேரும், தேங்காப்பட்டணம் படபச்சை பகுதியில் 3 பேரும், ராணிப்பேட்டையில் கார்த்திக் என்பவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.