தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான “தர்பார்” படம், எதிர்பார்த்த வகையில் ஓடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், “தர்பார்” படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள், பெரும் அளவில் நஷ்டம் அடைந்ததாகத் தெரிகிறது.

இந்த நஷ்டம் தொடர்பாக படத்தின் நாயகன் ரஜினிகாந்த் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் விநியோகிஸ்தர்கள் பேச முயன்றனர். ஆனால், அதற்கு அவர்கள் இருவரும் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ்க்கு விநியோகிஸ்தர்கள் சார்பில் தொடர்ந்து மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. அத்துடன், ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர்களுக்கு எதிராகப் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

இதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனு தாக்கல் செய்தார்.

அதில், “ “தர்பார்” படத்தை இயக்கியது மட்டுமே தனது பணி என்றும், படத்தின் விநியோகத்திலோ, வியாபாரத்திலோ தனக்கு தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, விநியோகிஸ்தர்கள் சங்கமும், இயக்குனர் சங்கமும் ஒன்று இணைந்து, பேச்சு வார்த்தை மூலம் பேசி இந்த பிரச்சனையில் சமரசம் செய்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவைத் திரும்ப பெறுவதாகக் கூறினார்.
இதனால், கடும் கோபமடைந்த நீதிபதி, “நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், ஏ.ஆர்.முருகதாஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.

அத்துடன், மனுவை திரும்பப்பெறுவதாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு கூறியதை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.