இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 1,396 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஊடுருவிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல், தற்போது 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது.

குறிப்பாக, இன்று காலை வரை 11 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவிலேயே அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் மேலும் 427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,009 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், அந்த மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஜெய்பூரில் 1,005 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் 1,074 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,765 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்க நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,301 லிருந்து 1,396 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,633 லிருந்து 11,707 ஆக உயர்ந்துள்ளது.

சத்தீஸ்கரில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர்.

மேலும், வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு, மனிதாபிமான அடிப்படையில் ரயில் கட்டணம் வசூலிக்காதீர்கள் என்று உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில், மது வாங்க 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள், சமூக இரைடவெளியை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல், வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பாகும் ரயில் பயண செலவை, காங்கிரசே ஏற்கும் என்று, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வருமான வரிப் பிடித்தத்தில் கூடுதல் தொகையைத் திரும்பப் பெறலாம் என்று வரும் செய்தி வதந்தி என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.