தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17 அம் தேதி வரை நீட்டிக்கத் தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் 3 வது முறையாக ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தது. இவற்றுடன் நாட்டின் பல்வேறு பணிகளுக்கும் சில தளர்வுகளும் அளித்து உத்தரவிட்டது.

  TN cabinet approved the extension of Lockdown

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்தும், ஆலோசித்து முடிவு எடுக்க முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூடி, சற்று முன்பு நிறைவடைந்தது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தமிழக மக்களுக்கு பல்வேறு பணிகளில் சில தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முடிவும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான உத்தரவை பரிசீலனை செய்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17 அம் தேதி வரை நீட்டிக்கத் தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்” அளிக்கப்பட்டுள்ளது. “ஆனால், தடை செய்யப்பட்ட பகுதிகளில் எந்தவித தளர்வும் இல்லை” என்றும், தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், “சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு ஆட்கள் மற்றும் பொருட்கள் இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சமூக இடைவெளியைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள அனுமதி” வழங்கப்பட்டுள்ளது.

TN cabinet approved the extension of Lockdown

“சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி” வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, “நகர்ப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கலாம்” என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. 

அதே நேரத்தில், “தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை” என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

“கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும், “நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களைத் தவிர்த்து, தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கவும்” அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

“ சென்னையில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை” என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், “அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்” என்றும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் அவற்றிற்கான போக்குவரத்துக்கு அனுமதியும்” வழங்கப்பட்டுள்ளது.

“ஐடி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 பேரைக் கொண்டு செயல்படவும் அனுமதி” வழங்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தில், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கவும்” தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

குறிப்பாக, “நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு வழக்கம்போல் தொடரும்” என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த உத்தரவுகள் அனைத்தும், மே 4 முதல் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது” என்றும் தமிழக அரசு மிகத் தெளிவாக கூறியுள்ளது.