தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்கள் முன்பு வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது.

இந்நிலையில், இந்தோனேசியா நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய 4 பேர், இவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்த ஒருவர் மற்றும் மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 211 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 ஆயிரத்து 492 பேர் வீட்டு கண்காணிப்பில் தனியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சலூன் கடைக்காரருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்றும், அவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்துள்ளார்” என்றும் கூறினார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் தனி மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என்றும், 225 சாதாரண படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கு 125 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவையைத் தவிர மற்றபடி வேறு யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.