“ஸ்டேசன்ல ஏற்கனவே என் படம் இருக்கு” என்று இருசக்கர வாகனத்தைத் திருடும்போது மாட்டிக்கொண்ட பெண் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் எல்லாம், இப்போது தான் வீறுகொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை பெண்களாகச் சரித்திரம் படைத்து வருகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட சிங்கப் பெண்களுக்கு மத்தியில், ஒரு கருப்பு ஆடு ஒளிந்திருப்பது, சிங்க பெண்களுக்கு அவமானத்தையும், அசிங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்த யாசர், தனது இருசக்கர வாகனமான டியோ ஸ்கூட்டரை, வீட்டிற்கு முன்பு தெருவில் நிறுத்துவது வழக்கம்.

சம்பவத்தன்று, வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து வந்த யாசர், தனது இருசக்கர வாகனத்தை எப்போதும் போல் நிறுத்திவிட்டு, வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, தெருவில் நடந்து வந்த 2 பெண்களில் ஒருவர், தன் வீட்டின் எதிர் புறத்தில் உள்ள மற்றொரு வீட்டின் படிக்கட்டில் அமர்கிறார். கூட வந்த மற்றொரு பெண், தன்னுடைய இருசக்கர வாகனத்தைக் கள்ளச் சாவி போட்டு, திருடு முயற்சிக்கிறார்.

இந்த காட்சிகளை, தன் வீட்டில் உள்ள சிசிடிவி மூலம் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த யாசர், பதறியடித்துக்கொண்டு கீழே ஓடி வருகிறார். வீட்டின் உரிமையாளர் ஓடிவருவதைப் பார்த்த அந்த 2 பெண்களும் அங்கிருந்து ஓடுகின்றனர்.

இதில், யாசர் சத்தம் போடவே, தப்பி ஓடியவர்களில் ஒரு பெண்ணை மட்டும், பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அந்த பெண்ணை வீடியோ எடுத்து, போலீசார் வந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

அப்போது, “ஸ்டேசன்ல ஏற்கனவே என் படம் இருக்கு. என்னையெல்லாம் வீடியோ எடுக்க வேண்டாம்” என்று அந்த பெண் கூறுகிறார். இதனால், அங்கிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்து, அழைத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண் கஞ்சா வியாபாரி சந்தியா என்பதும், அவருக்கு 19 வயது ஆவதும் தெரியவந்தது.

மேலும், இவருடன் வந்தவர் பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய மோனிஷா என்பதும் தெரியவந்தது. குறிப்பாக, கஞ்சா வியாபாரி சந்தியாவை போலீசார் பல நாட்கள் தேடிவந்த நிலையில், தற்போது, இருசக்கர வாகனம் திருடும்போது, பொதுமக்களால் மடக்கப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சென்னையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போவதாக பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த திருட்டு சம்பவத்தில், ஒரு பெண் ஈடுபட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.