இளம்பெண் கடத்தி செல்லும்போது காப்பாற்ற முயன்ற இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையம் அருகில் உள்ள கூட்டுச் சாலையில் தான், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 26 ஆம் தேதி மாலையில் 29 வயது இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஷேர் ஆட்டோவில் நரசிங்கபுரம் செல்லாவதற்காக ஏறி உள்ளார். 

 Tiruvallur man killed trying to save a girl

அப்போது, ஆட்டோ சிறிது தூரம் சென்றதும், சில ஆண்கள் ஆட்டோவில் ஏறி உள்ளனர். பின்னர், ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல், மற்றொரு சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னை கடத்திச் செல்வதாக சத்தம் போட்டுக் கத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஈஸ்டர், யாகேஷ், துரைராஜ், சார்லி, வினித் ஆகியோர், தங்களது இருசக்கர வாகனத்தில், ஆட்டோவை துரத்திச் சென்றுள்ளனர். இதனிடையே, அந்த பெண் ஆட்டோவிலிருந்து கீழே குதித்துள்ளார்.

ஆனால், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விடாமல், அந்த ஆட்டோவை துரத்திச் சென்றுள்ளனர். அப்போது, கடத்தல் ஆட்டோ, துரத்திச் சென்ற ஒருவருடைய இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது.

 Tiruvallur man killed trying to save a girl

இதில், ஆட்டோவைத் துரத்திச் சென்ற 2 பேர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவருக்கும் பலமாகக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவருகம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாகேஷ் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.