சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில, இன்று முதல் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதுபோல ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் “கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச பயணிகளை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

புதிதாக உருவாகும் ஹாட்ஸ்பாட்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து 14 நாட்கள் கவனிக்க வேண்டும். அதிகப்படியான பரிசோதனை மூலம் தொடக்க நிலையிலேயே வைரஸ் பாதிப்பை கண்டறிய வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் குழந்தைகளுக்காக சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மறு ஆய்வு செய்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதில் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

டிசம்பர் 1 முதல் 7 வரை 1,088 ஆக பாதிப்புகள் இருந்தன. 8 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் 987 பேருக்கும், 15 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் 1,039 பேருக்கும், 22 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் 1,720 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த விஷயத்தில் விரைவாக செயல்பட வேண்டியது அவசியம். நோய்த்தொற்று மேலும் பரவாத வகையிலும், உயிரிழப்புகள் அதிகரிக்காத வண்ணமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சரியான இலக்குடன் விரிவான பரிசோதனை, RT-PCR மற்றும் RAT பரிசோதனைகளை உரிய விகிதத்தில் மேற்கொள்ளுதல், தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதனை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்தல், மருத்துவ அளவிலான தயார் நிலை, ECRP2-ன் கீழ் நிதி மூலங்களை சரியாக பயன்படுத்துதல், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்துதல், உரிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி “மும்பை, புனே, பெங்களூர், குருகிராமம், அகமதாபாத், சென்னை, நாசிக் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. இதில் 320 பேர் குணமடைந்துள்ளனர். எனவே மாநில அரசுகள் தேவைப்பட்டால் சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம்” என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது, "சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.