கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு ஐ.பி.எல். போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கலைகட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ், சீனாவிலிருந்து உலகம் முழுவதும் சுமார் 97 நாடுகளுக்குப் பரவி உள்ள நிலையில், அது இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவில் இதுவரை 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக, ஏராளமானோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் குறிப்பிட்ட சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று பேசப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதுவரை ஐ.பி.எல். போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ தரப்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப் பூர்வமாக இன்னும் ஒரு சில நாட்களில் அந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, “கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால், ஐ.பி.எல். போட்டிகளைத் தாமதமாக நடத்தலாம்” என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே முன்னதாக யோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.