பாஜக கட்சியை சேர்ந்த நடிகை சோனாலி போகட், வேளாண் சந்தைக் குழுவின் உறுப்பினர் ஒருவரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த பாஜகவை சேர்ந்த நடிகை சோனாலி போகட், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அங்குள்ள ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுள்ளார்.

இதனிடையே, ஹரியானாவில் உள்ள ஒரு விவசாயச் சந்தையை சேர்ந்த சில விவசாயிகள், அங்குள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்தித்து சில கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பாஜகவை சேர்ந்த நடிகை சோனாலி போகட் உடன், அந்த விவசாயிகள் மீண்டும் சென்றுள்ளனர். அப்போது, நடிகை சோனாலி அந்த வேளாண் துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை செருப்பால் அடித்து, கடுமையாகத் தாக்கி உள்ளார்.

குறிப்பாக, ஒரு அடியுடன் நிறுத்தாமல், தொடர்ந்து அந்த அதிகாரியை அவர் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதை, அங்கு நின்றிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சுல்தான்சிங் கூறும்போது, “நடிகை சோனாலி என்னிடம், நான் யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டார். அதற்கு நான், “ நீங்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்” என்று கூறினேன். அத்துடன், “விவசாயிகள் அளித்த புகார்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வாங்கி வைத்துள்ளேன் என்றும், அது தொடர்பாக விரைவில் புகார் எடுக்கப்படும்” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், “ஆதம்பூர் தேர்தலில் என்னை ஏன் எதிர்த்தாய்” என்று கேட்டார். அதற்கு நான் “எப்போதோ நடந்ததை தற்போது ஏன் நீங்கள் பேச வேண்டும்” என்று பேசிக்கொண்டு இருந்தபோதே, அவர் என்னைத் தாக்கிவிட்டதாகவும், சோகத்தோடு கூறியுள்ளார்.

அத்துடன், அரசு அதிகாரியைத் தாக்கிய பாஜகவை சேர்ந்த நடிகை சோனிலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.