“குற்றம் 23” சினிமா பட பாணியில், வங்கி பெண் அதிகாரியிடம் “விந்து தானம்” செய்த டோனர் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த அமுதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கணவரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார்.

Sperm donor threatens woman in cinema style

மேலும், அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அமுதா பணியாற்றி வருகிறார். அங்கு, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ரபியா பஸ்ரின் என்பவர், அமுதாவிற்கு அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ரபியா பஸ்ரின், தனது கணவர் நாகூர் மீரானையும், அமுதாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து, இவர்கள் நட்பு பாராட்டி வந்த நிலையில், “தனக்கு குழந்தை இல்லை” என்று அமுதா ஏங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக அமுதாவிற்கு ஐடியா தந்த நாகூர் மீரான், ஒரு மருத்துவரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

அந்த மருத்துவர் உதவியுடன் அமுதாவிற்கு டெஸ்ட்டியூப் மூலம் இரட்டைப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக உதவி செய்த நாகூர் மீரான் குடும்பத்திற்கு, அமுதா இதுவரை 13 லட்சம் ரூபாய் வரை பணம் தந்து உதவி செய்துள்ளார்.

Sperm donor threatens woman in cinema style

இந்நிலையில், “குழந்தை பிறந்ததற்குக் காரணம் நான் தான் என்றும், 'விந்து தானம்' செய்தது நான் தான் என்றும், நாகூர் மீரான் அமுதாவிடம் பிரச்சனை செய்து 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

அத்துடன், பணத்தைத் தரவில்லை என்றால், குழந்தையை கொன்றுவிடுவேன் என்றும் நாகூர் மீரான் அமுதாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அமுதா, எழும்பூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நாகூர் மீரானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, “குற்றம் 23” சினிமா பட பாணியில், வங்கி பெண் அதிகாரியிடம் “விந்து தானம்” செய்த டோனர், மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.