பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை அசாதுதின் ஓவைசி கடுமையாக எதிர்த்துளார்.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வர உள்ளது.

1929-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த சிறுவர் விவாக கட்டுப்பாடு சட்டத்தில் 1978-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக பதினெட்டுலிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் அவர் பேசுகையில் இந்த அரசாங்கம் எப்போது தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம். இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து முன்னதாக பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. அதற்கு ஜெயா ஜேட்லி தலைமை வகிக்கிறார். நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால் சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி இது நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கடுமையாக சாடியுள்ள அசாதுதின் ஓவைசி 18-வயதில் நாட்டின் பிரதமரையே தேர்வு செய்யும் பொழுது திருணம் செய்யக்கூடாதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் குழந்தைகளின் திருமணத்தை தடுக்க சட்டம் இருந்தாலும் அதை தடுக்க முடியவில்லை. பெண்களுக்கு கல்வி, பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதே தீர்வு. எனவே பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணையிக்க வேண்டும் எனவும் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.