நடிகர் சோனு சூட்டிடம் பீகார் தேர்தலில் பாஜகவில் எம்.எல்.ஏ சீட்டு வாங்கித் தரும்படி அவரது ரசிகர் ஒருவர் உதவி கேட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோரை அவரவர் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்து உதவி செய்தார் நடிகர் சோனு சூட்.

குறிப்பாக, வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களுக்கும் விமானம் ஏற்பாடு செய்து கொடுத்து, அவர் இந்தியா அழைத்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்தவர்களுக்காக பல்வேறு உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார் சோனு சூட்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும்பாலான பள்ளிகள் வீடியோ கால் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கத் தொடங்கியது. இதனால் செல்போன் இல்லாத மாணவர்கள் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதே போல, ஹரியானா மாநிலத்திலுள்ள மோர்னி என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலரிடம் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தால், மிக தொலைவில் நடந்து சென்று வகுப்பைக் கவனித்து வந்துள்ளனர். இந்த செய்தியைக் கவனித்த நடிகர் சோனு சூட் அவர்களுக்கு விரைவில் மொபைல் கிடைக்கச் செய்கின்றேன் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படியே, அந்த கிராமத்தில் தொலைவில் சென்று படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் வாங்கி கொடுத்து, அந்த மாணவர்களிடம் வீடியோ காலிலும் பேசினார் நடிகர் சோனு சூட்.

இப்படி கொரோனா ஊரடங்கால், தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நடிகர் சோனு சூட், தற்போது பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க புதிய திட்டத்தைத் துவக்கி உள்ளார். இதற்காக, அவரின் தாயார் பேராசிரியர் சரோஜ் சூட் என்ற பெயரில் கல்வி உதவித் தொகை தந்து வருகிறார் நடிகர் சோனு சூட்.

அதே நேரத்தில், உதவி கேட்டு யாராவது அனுப்பியுள்ள மெசேஜை தான் கவனிக்காமல் தவற விட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நடிகர் சோனு சூட் கூறியிருந்தார்.

சமூக வலைத்தளங்கள் மூலமாக நடிகர் சோனு சூட்டிடம் நாள் தோறும் பலரும் மெசேஜ்கள் மூலமாக உதவிகளைக் கேட்டு வருகிறார்கள். இதில், அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, டிராக்டர் வாங்கித் தருவது, மருந்துகள் வாங்கி அனுப்புவது, வேலை வாங்கி கொடுப்பது என, அவரால் ஆன பல உதவிகளையும் அவர் செய்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், அவரிடம் பொதுமக்கள் கேட்கும் உதவிகள் மட்டும் இன்னும் நிற்காமல் தொடர்கிறது. அவர்களுக்கும் அவர் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரது குறும்புக்கார ரசிகர் ஒருவர் ஒரு வித்தியாசமான உதவியைக் கேட்டிருக்கிறார். அதாவது, “வர இருக்கம் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தாருங்கள்” என்று, ரசிகர் ஒருவர் டிவிட்டரில் அவருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆனால், இதற்குச் சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ள நடிகர் சோனு சூட், “எனக்கு பஸ், ரயில், விமானங்களுக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கத் தெரியும்.

அரசியல் கட்சிகளில் எப்டி சீட் வாங்கித் தருவது என்று எனக்குத் தெரியாது” என்று, பதில் அளித்து உள்ளார். இதனால், இந்த கேள்வியும், பதிலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.