“உங்கள கல்யாணம் செய்வதற்கு முன்பே, அவர் எனக்கு ஃபேஸ்புக் நண்பர்” என்று கணவனை எதிர்த்து மனைவி பேசி சண்டை போட்டதால், அந்த ஃபேஸ்புக் நண்பனை தேடி கண்டுபிடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சமூகத்தில் கணவன் - மனைவி உறவு என்பது அவ்வளவு உன்னதமான உறவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய சமூகத்தில் வாழும் கணவன் மனைவிகள் பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமல், வாழ்க்கையை வாழத் தெரியாமல், திக்கும் தெரியாமல், திசையும் புரியாமல் மந்திரித்து விட்டவாறு தன் இஷ்டம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவமும் ஒரு சாட்சி கூறுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த அயாஜ் ஷேக், தன் மனைவி உடன் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அப்போது, அவரின் மனைவி, எப்போதும், ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடந்ததாகத் தெரிகிறது.

குறிப்பாக, ஃபேஸ்புக் மூலம் நட்பான ஒரு ஆண் நண்பர் உடன், அவர் மனைவி மணிக்கணக்கில் சாட்டிங்கில் இருந்து உள்ளார். அந்த ஆண் நண்பர் பெயர்  வியன்காட் ஜாதவ். இவர், அந்த பகுதியில் ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அத்துடன், கணவன் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வரும் போதெல்லாம், தன் மனைவி அவரின் ஃபேஸ்புக் நண்பன் வியன்காட் ஜாதவ்விடம் சாட்டிங் செய்வதிலேயே இருந்துகொண்டு, கணவனைச் சரிவரக் கவனித்துக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவன் அயாஜ் ஷேக், இது குறித்து தன் மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்து உள்ளது.

அப்போது, கணவனிடம் வாக்கு வாதம் செய்த அவர் மனைவி, “உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, நாங்கள் இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்கள். அதே நேரத்தில், நாங்கள் இருவரும் இது வரை சந்தித்ததே இல்லை. எங்கள் நட்பு அவ்வளவு சுத்தம். நாங்கள் இருவரும் முகம் தெரியாத நல்ல நண்பர்கள் தான்” என்று வாக்கு வாதம் செய்துள்ளார்.

இதனால், மனைவி மீது இருந்த கோபம் மனைவியின் ஃபேஸ்புக் நண்பன் ஜாதவ் மீது திரும்பி உள்ளது. இதனையடுத்து, ஜாதவ் யார் என்பதைத் தெரிந்துகொண்ட அயாஜ் ஷேக், திட்டம் போட்டு மனைவியின் நண்பன் ஜாதவை தனியாக ஒரு இடத்திற்கு வரவழைத்து உள்ளார். அவரும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளார். 

அப்போது, தன் நண்பனுடன் அங்கு மறைந்து நின்ற அயாஜ் ஷேக், தன் நண்பருடன் சேர்ந்து ஜாதவ்வை தாக்கி கொலை செய்து உள்ளார்.

மேலும், அயாஜ் ஷேக் செய்த கொலைக்கு உதவிய அவரது நண்பன் சோன்யா பரதே, ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஜாதவ்வை காணாமல் அவரது சகோதரர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், அவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அவர்களுக்குத் தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையில், அயாஜ் ஷேக் மற்றும் அவரது நண்பர் சோன்யா பரதே ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது, அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கொலைக்கான காரணமாக, இந்த ஃபேஸ்புக் நட்பால் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனிடையே, மனைவியின் ஃபேஸ்புக் நண்பரைக் கணவனே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.