கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 23-ஆம் தேதியிலிருந்து இந்தியா முழுக்க, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. மேலும் தொற்று பரவும் விகிதத்திற்கு ஏற்ப ஊரடங்கை மேலும் நீட்டித்து  மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பல்வேறு தொழில்துறைகள் இழப்புகளை சந்தித்துள்ளன. அந்தவகையில் சாலைப்போக்குவரத்துத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமாக இருக்கும் கொரோனா தொற்று பரவலுக்கு இடையேவும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதிக அளவிலான மக்கள் பயணிப்பதால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாலைப் போக்குவரத்துத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் அளித்த தகவலின்படி,  50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவதால் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும். எனினும் இதன் மூலம் 2021 நிதியாண்டில் சாலைப் போக்குவரத்து கழகத்திற்கான வருவாய் 35 முதல் 40 சதவிகிதம் குறைய வாயுப்புள்ளது. 

இத்தகைய வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பயணக் கட்டணங்களை உயர்த்தி மாநில அரசுகள் சாலைப் போக்குவரத்துத்துறைக்கு உதவ முன்வரவேண்டும்.

எந்தவொரு குறிப்பிடத்தக்க பணப்புழக்க பற்றாக்குறையையும் தவிர்ப்பதற்காக மோட்டார் வாகன வரி (எம்விடி) ஒத்திவைத்தல் மற்றும் பணியாளர் சம்பளம் போன்ற நிலையான செலவுகளில் மாநில அரசுகள் மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாலை போக்குவரத்தின் நிலை இப்படியாக இருக்க, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உள்ளிட்ட நிா்வாக அமைப்புகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விமான விபத்து விசாரணை அமைப்பு, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘விமானப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதா - 2020’, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு மக்களவை கடந்த மாா்ச் மாதம் 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அந்த மசோதாவை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

``விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தி வரும் முக்கிய அமைப்புகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு கடந்த 2012, 2015-ஆம் ஆண்டுகளில் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை பெரும் வளா்ச்சி கண்டு வருவதால், அரசு உத்தரவின் அடிப்படையில் நிறுவப்பட்ட 3 அமைப்புகளுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் விமான நிறுவனங்களுக்கான அபராதத்தை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயா்த்துவதற்கும் விமானப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதா வழிவகுக்கிறது.

கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அபராதம் ரூ.2,000-லிருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை விவகாரங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அத்தகையோருக்கான அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாகவே இருக்கும்" 

இவ்வாறு அவர் கூறினார்.