“தமிழ் எங்கள் உயிர்” திமுக தலைவவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய டிரெண்ட்!

“தமிழ் எங்கள் உயிர்” திமுக தலைவவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய டிரெண்ட்! - Daily news

“தமிழ் எங்கள் உயிர்” என்று, திமுக தலைவவர் மு.க.ஸ்டாலின் புதிய டிரெண்டிங்கை தொடங்கி வைத்து உள்ளார். 

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொடர்ந்து இந்தி மொழி திணிக்கப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, “தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வேத் துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். நெய்வேலி அனல் மின் நிலையம்; திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற மத்திய அரசின் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவர்களையும், இன்னும் பிற மாநிலத்தவர்களையும் வேலையில் அமர்த்தி வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அத்துடன், சொந்தத் தாய் மண்ணிலேயே வேலைக்குத் தகுதியான தமிழர்கள் ஏதிலிகள் (Refugees) போல் ஒதுக்கி வைக்கப்பட்டு, மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்றுத் தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வட நாட்டுத் தேர்வு மையங்களில் நடந்து வருகின்றன” என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அதிகாரிகள் மீது ஹிந்தி திணிக்கப்பட்டு வருவதாகவும், ஹிந்தி தெரியாத அதிகாரிகளுக்கு ஹிந்தி பிரிவில் பொறுப்புகள் மற்றும் பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனால், உச்சக்கட்ட ஹிந்தி திணிப்பில் தமிழகம் சிக்கித் தவித்து வருவது அவ்வப்போது தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருந்தன.

இதனையடுத்து, ஒரு வார இதழில் இயக்குனர் வெற்றிமாறன், “ஹிந்தி தெரியாத நான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன்” என்று பேட்டி அளித்திருந்தார். இதனால், கொந்தளித்த தமிழகம், “ஹிந்திதெரியாதுபோடா” என்ற, ஹேஷ்டேக்கை கடந்த வாரம் டிரெண்டாக்கியது. இது, இந்திய அளவில் டிரெண்டாக்கிய நிலையில், இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “ஹிந்திதெரியாதுபோடா” என்ற, ஹேஷ்டேக்கை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக, தமிழ் திரை உலகில் பலர் இந்திக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த டிரெண்டில் அதிரடியாகக் களம் இறங்கினர். இதன் காரணமாக, “ஹிந்தி தெரியாது போடா“ என்ற வாசம் இடம் பெற்ற டி சர்ட்டுகள் பிரபலமடைந்தன.

அதன் தொடர்ச்சியாக, “தமிழ் எங்கள் உயிர்” என்ற வாசகம் இடம் பெற்ற டி ஷர்ட் அணிந்தவாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வாரத்தின் இறுதி நாட்களில் ஈ.சி.ஆர். சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதன்படி, கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் சென்ற போது, தந்தை பெரியர், அறிஞர் அண்ணா, திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அகியோரின் படங்களுடன் “தமிழ் எங்கள் உயிர்” என்ற வாசகம் இடம் பெற்ற டி ஷர்ட் அணிந்தவாறு சென்றார்.

இந்த டி ஷர்ட்டில் தமிழ் என்ற வார்த்தை மட்டும் தமிழிலும், எங்கள் உயிர் என்ற வார்த்தைகள் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, தமிழகத்தில் இரு மொழி கொள்கையை வலியுறுத்தும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த டி ஷர்ட்டை அணிந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஏற்கனவே கடந்த வாரம் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட டி ஷர்ட் டிரெண்ட் ஆகி வந்த நிலையில், தற்போது “தமிழ் எங்கள் உயிர்” என்ற வாசகம் தாங்கிய டி ஷர்ட் டிரெண்ட்டாகத் தொடங்கி உள்ளது. அத்துடன், “பேன் நீட்” என்ற வாசகத்தைக் கொண்ட முகக்கவசத்தை திமுக வினர் சட்டமன்றத்திற்கு அணிந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment