இந்தியா வந்த நவீனின் உடல்- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை அஞ்சலி!

இந்தியா வந்த நவீனின் உடல்- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை அஞ்சலி! - Daily news

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடந்து 25 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

மேலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உக்ரைனும் தனியாளாக ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரஷிய படையினர் உக்ரைன் மீது குண்டுவீசியபோது, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடல் இன்று காலை இந்தியா வந்தது.

நவீனின் உடலை ஏற்றி வந்த விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்தது. பெங்களூரு வந்த நவீன் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பொம்மை, உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடலை நாட்டுக்கு கொண்டு வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நாம் சண்டையில் இழந்தது வருத்தமளிக்கிறது என கூறினார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு நவீனின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

என் மகன் மருத்துவத் துறையில் ஏதாவது செய்ய விரும்பினான், அது நடக்கவில்லை. குறைந்த பட்சம் அவரது உடலை மற்ற மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்தலாம். அதனால்தான் அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளோம் என நவீன் தந்தை தெறிவித்தார். விமான நிலையம் வந்திருந்த நவீனின் இளைய சகோதரர் ஹர்ஷா தனது சகோதரரின் உடலை கர்நாடகாவுக்கு கொண்டு வந்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

விமான நிலையத்தில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் முதல்வர் பொம்மைக்கு நன்றி தெரிவித்தனர். நவீன் குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment