ஆண் பெண்ணாக மாறி, பெண் ஆணாக மாறி, பாலின மாற்றம் செய்து கொண்ட தம்பதியினர், 2 வது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் தான் இப்படி ஒரு விநோதமான சம்பவம் நடந்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் லண்டனைச் சேர்ந்த 32 வயதான ஹன்னாஹ், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் ஆவர். 

அதே போல், 41 வயதான ஜேக் கிராஃப், அந்நாட்டில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர் ஆவர்.
 
இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

திட்டமிட்ட படி, அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழச்சியாக சென்றுகொண்டு இருந்தது. அப்போது, அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்ற திடீர் ஆசை ஒன்று ஏற்பட்டு உள்ளது. 

அதன் படி, ஜேக் கிராஃப் பெண்ணாக இருக்கும் போதே, தனது கரு முட்டைகளை சேகரித்து உறைய வைத்திருந்தார். அந்த கரு முட்டைகளை பயன்படுத்தி அவர்கள் தங்களது முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த லவுரா என்ற வாடகைத் தாய் அவர்களுக்கு அறிமுகம் ஆகி, குழந்தையை சுமக்க முன்வந்து உள்ளார். 

இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த பெண் 'மில்லி' என்ற மிக அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதில், இப்போது தந்தை ஸ்தானத்தில் இருக்கும் நபர், தாயாக தனது கருமுட்டைகளை பயன்படுத்தி உள்ளார். 

இப்படியாக, இந்த தம்பதியரின் குழந்தை ஆசை நிறைவேறி உள்ள நிலையில், மீண்டும் வாடகைத் தாயாக லவுரா முன்வந்து உள்ளார். இதை தொடர்ந்து, 2 வது குழந்தையை பெற்றுக்கொள்ள அவர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த நிகழ்வு அந்நாட்டில் வைரலாகி வருகிறது.

அதே போல், 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அந்த சிறுமியே போலீசாருக்கு போன் செய்து தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்தி உள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் ஜல்னா மாவட்டம் ஜாப்ராபாத் தாலுகா தம்பூர்ணி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வரும் தங்களது 13 வயது மகளை, அந்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். அதன்படி, திருமணம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும், அவர்கள் செய்து வந்தனர்.

பெற்றோரின் முடிவால் கடும் மன வேதனை அடைந்த அந்த 13 வயது சிறுமி, அவர்களுக்கு தெரியாமல் நைசாக போலீசாருக்கு போன் செய்து, தனக்கு நடைபெற்ற உள்ள தகவல் குறித்து தெரிவித்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், விரைந்து வந்து சிறுமியின் பெற்றோரை சந்தித்து, அவர்களை கடுமையாக எச்சரித்தனர். 

அதன் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அந்த சிறுமியிடம் இருந்து போலீசுக்கு மீண்டும் போன் வந்தது. அப்போது கடந்த 27 ஆம் தேதி, தனக்கு ரகசிய திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வருவதாக அந்த சிறுமி கூறி உள்ளார். இதனையடுத்து, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறுமியின் பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், “தங்கள் மகளுக்கு 18 வயது வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம்” என்று சிறுமியின் பெற்றோர் உறுதி அளித்து எழுதிக்கொடுத்து உள்ளனர். 

குறிப்பாக, 2 முறை போலீசாருக்கு போன் செய்து தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சிறுமியை உயர் போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.