மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜோசப். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மனைவி இறந்து விட, அது விபத்தல்ல கொலை என்பதை ஹீரோ எப்படி கண்டுப்பிடிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் சொல்லியிருப்பார்கள். தற்போது இந்தப்படம் தமிழில் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. 

இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ஜோசப் படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். 

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 23-ம் தேதி விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது படத்தின் டீஸரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். டீஸர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

ஆர்.கே சுரேஷ் இதற்கு முன்பு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அது தவிர பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். விசித்திரன் படத்தில் தன்னுடைய ரோலுக்காக உடலை ஃபிட்டாக 73 கிலோவாக குறைத்து இருந்தார். வயதான ரோலுக்காக அவர் 22 கிலோ உடல் எடையை அதிகரித்து குண்டாக தொப்பையுடன் இருக்கும் புகைப்படமும் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. 

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ். கலையரசன் நடிக்கும் புதிய முகம், வன்முறை போன்ற படங்கள் ஆர்.கே.சுரேஷ் கைவசம் உள்ளது.