12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று டிசம்பர் 31-ந் தேதி தமிழகமெங்கும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏராளமான ரசிகர்கள் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்குமாறு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர். 

இதற்கு பதிலளித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பேன் என தெரிவித்து உள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆவலுடனும் உள்ளனர் திரை ரசிகர்கள். சமீபத்தில் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் செல்வராகவன். தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் ப்ரீ- ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றது. அருண் மாதேஸ்வரனின் முழுத் திரைக்கதையையும் படித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் அவரை பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.