கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தேர்தல் செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று (மார்ச் 20-ஆம் தேதி) நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர்கள் அணியும் இயக்குனர் நடிகர் பாக்யராஜ் அவர்களின் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர். பாண்டவர்கள் அணியில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும், சங்கரதாஸ் சுவாமிகள் அணியில் கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி மற்றும் உதயா ஆகியோரும் முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர்.

பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி அபார வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் அனேக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாண்டவர் அணியின் வெற்றி குறித்து பொதுச்செயலாளர் விஷால் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார், குறிப்பாக அந்த அறிக்கையில், "நேர்மையும் கடின உழைப்பும் எப்போதும் தோற்காது…” “என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பாண்டவர் அணியின்உறுப்பினர்களுக்கும் என் இதயத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ள நடிகர் விஷால் சரியான முறையில் தேர்தலை நடத்தி முடித்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊடகத் துறையினர், காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாண்டவர் அணியிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, "மீண்டும் நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்கி விரைந்து கட்டி முடிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சங்க தேர்தல் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினருடன் விஷால் கொண்டாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.