தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான கைகலா சத்யநாராயணா கடந்த 1959 ஆம் ஆண்டு வெளிவந்த சிப்பாயி கூத்துரு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர்.

கிட்டத்தட்ட 750 திரைப்படங்களுக்கு மேல் தனது திரைப்பயணத்தில் நடிகராக நடித்துள்ள கைகலா சத்ய நாராயணா அவர்கள் அரசியலிலும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு கைகலா சத்யநாராயணா அவர்கள் வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம் சார் விருது பெற்றார்.

தமிழில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் தந்தை பெரியார் அவர்களின் பயோபிக் திரைப்படமாக தயாரான பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரமான வெங்கடப்ப நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த கைகலா சத்யநாராயணா பேசிய “கிரைனைட் பிசினஸ் பெத்த கல்லு சின்ன லாபம்... டைமன்ட்ஸு சின்ன கல்லு பெத்த லாபம்” வசனத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

இந்நிலையில் மக்களின் மனம் கவர்ந்த பழம்பெரும் நடிகர் கைகலா சத்யநாராயணா தனது 87வது வயதில் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இவரது மறைவுக்கு முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.