ஆளவந்தான்: உலகநாயகன் கமல்ஹாசனின் கல்ட் கிளாசிக் சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் பட ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு,ulaganayagan kamal hassan in aalavandhan re release date announcement | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலக நாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அவர்கள் விரைவில் ஆளவந்தான் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி சமீபத்தில், தனது X பக்கத்தில், “எழிலோடும்.. பொலிவோடும்.. ஆளவந்தான் விரைவில், வெள்ளித்திரையில்..” எனக் குறிப்பிட்டு ஆளவந்தான் திரைப்படத்தின் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அந்த போஸ்டரில் “விரைவில் உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் ஆளவந்தான்… இன்று 22 ஆம் ஆண்டில்” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளவந்தான் திரைப்படம் ரிலீஸாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், “புதுமைக்கு வித்திட்ட ஆளவந்தான்-ஐ வெளியிடுவதில் அளவில்லா ஆனந்தம்”  என தனது X பக்கத்தில் குறிப்பிட்டு, வருகிற டிசம்பர் 8ம் தேதி முதல் உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் ஆளவந்தான் ரீ ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி S தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு இதோ… 

 

புதுமைக்கு வித்திட்ட ஆளவந்தான்-ஐ வெளியிடுவதில் அளவில்லா ஆனந்தம் @ikamalhaasan @Suresh_Krissna #Aalavandhan pic.twitter.com/xrNEw5CPX9

— Kalaippuli S Thanu (@theVcreations) November 17, 2023

கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தீரா தாகத்தோடு வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளாலும் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். அந்த வகையில், கடந்த 2001 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த மிக முக்கிய கல்ட் கிளாசிக் சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் ஆளவந்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சத்யா படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைந்த படத்தின் ஆளவந்தான் கதை, திரைக்கதை, வசனங்களையும் உலகநாயகனை எழுதினார். நந்தகுமார் & விஜயகுமார் எனும் அண்ணன் தம்பிகளாக இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட அதிரடியான கதாபாத்திரங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்திருப்பார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் ஒரு கேரக்டர் அனிமல் இன்னொரு கேரக்டர் ட்ரெயின்ட் அனிமல் என்று இந்த கதாபாத்திரங்களை கமல்ஹாசன் விவரித்ததாக தெரிவித்து இருந்தார். 

இந்த திரைப்படத்தில் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருக்கக்கூடிய சில ஆக்சன் காட்சிகள் உட்பட பல இடங்களில் கார்ட்டூன் மாதிரியான ஒரு அனிமேஷனை கமல்ஹாசன் கையாண்டிருப்பார். குறிப்பாக இந்திய சினிமாவிற்கு மோஷன் கேப்ச்சர் என்ற டெக்னாலஜியை உலகநாயகன் அறிமுகப்படுத்தியதும் இந்த ஆளவந்தான் படத்தில் தான். வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த இந்த ஆளவந்தான் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கத் தவறிய போதும் பின்னாளில் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. சமீப காலமாக உச்ச நட்சத்திர நாயகர்களின் மிக முக்கிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  உலகநாயகன் கமல்ஹாசனின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ஆளவந்தான் திரைப்படம் புது பொலிவுடன் புது படத்தொகுப்பு செய்யப்பட்ட வெர்ஷனாக வெளிவந்து ரசிகர்களை கவரும் என்பதில் என்ன சந்தேகம் இல்லை.