ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் மகத்தான கலைஞனாக திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்னும் கலையின் மீது தீராத தாகத்தோடு இன்னும் அதே மோகத்தோடு கலைஞானியாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் உலகநாயகனின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிர வைத்துள்ள நிலையில் தனது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கும் விதமாக கமல்ஹாசன் குறித்தும் விக்ரம் படம் குறித்து ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் பின்னாலிருந்து வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் உலகநாயகன்.

முன்னதாக மறைந்த முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது யுவரத்தனா திரைப்படத்தின் வெளியீட்டு சமயத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதே பாணியில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்வித்து இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…