தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை ஏப்ரல் 28-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வேற லெவல் ட்ரெண்டாகிவிட்டன.

இதுவரை நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்களுக்கு இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓப்பனிங் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கிடைத்துள்ளது. ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவில் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  தயாரிப்பாளரும் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் சிறப்பு காட்சியை கண்டுள்ளார். சமீபத்தில் வந்த திரைப்படங்களிலேயே நல்ல ரொமான்டிக் காமெடி திரைப்படமாக காத்துவாக்குல ரெண்டு திரைப்படத்தை ரசித்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.