இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலில் புகையிலை சார்ந்த வாசகத்தை படக்குழு இணைத்துள்ளது. நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 6 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் முன்னதாக தற்போது தனது திரைப்பயணத்தில் 67 ஆவது படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் லியோ திரைப்படம் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய பிளாக் பஸ்டராக வெற்றி பெற்றதும், கைதி - விக்ரம் படங்கள் இருக்கும் LCUம் லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளன. முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கி மார்ச் இறுதி வரை தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாகிறது. உனக்காக கடந்த ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் முதல் பாடல் நா ரெடி பாடல் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பாடலில் தளபதி விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளும் பாடல் வரிகளிலும் புகையிலை சார்ந்த விஷயங்கள் இருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. பல கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஒரு கதாநாயகர் புகைபிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சைகளின் எதிரொலியாக நா ரெடி பாடலில் “புகையிலை கேன்சரை வரவழைக்கும் உயிரை கொல்லும்” என்ற வாசகத்தை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.