சூப்பர் சிங்கர் ஜூனியரில் அடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் - கலங்கிய பிரியங்கா… தந்தையை இழந்த இளம் பாடகிக்கு ஆறுதல் சொன்ன தமன்!

சூப்பர் சிங்கர் ஜூனியரில் தந்தையை இழந்த இளம் பாடகிக்கு தமன் ஆறுதல்,Super singer junior 9 contestant sanu mithra about her father death | Galatta

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி காலங்கள் கடந்தும் பேசப்படக்கூடிய ஒரு மகத்தான இசை நிகழ்ச்சி ஆகும். இப்படி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி இதுவரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது இல்லை என சொல்லும் அளவிற்கு திறமையாளர்களை தேடி பிடித்து மக்கள் முன் கொண்டு வந்து அவர்களை திறமையில் இன்னும் மேம்படுத்தி அதற்கான அங்கீகாரமும் கொடுத்து தற்போது தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற புதுப்புது பாடகர்களை தயார் படுத்திக் கொடுத்து வரும் ஒரு அட்டகாசமான நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். சீனியர் ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் பிரிவில் ஒன்பதாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல  அட்டகாசமான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஆரம்பம் முதலே அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த இசையமைப்பாளர் தமன் அடுத்ததாக இந்த சீசனில் கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார். இதனிடையே இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்த வரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடந்த மற்றொரு நெகிழ்ச்சியான நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில்  அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது. சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார். சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும்  அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது. இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா,  என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா  தான் தந்தையை போல் பார்த்து கொண்டார்.  தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார். 

இந்நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார்,  என் ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என்  தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம்  “நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது” என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார். இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது. இசையில்  திறமை மிக்கவர்களுக்கு ஒரு அற்புதமான  மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.