தமிழ் சினிமாவில் இயல்பான நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் சூரி. சின்ன சின்ன ரோலில் திரைப் பயணத்தை தொடர்ந்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எதார்த்தமும், மண் வாசனை நிறைந்த உடல் மொழியாலும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக விளங்குகிறார். தளபதி விஜய், தல அஜித், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், சியான் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சூரியின் காமெடி பங்களிப்பு ஏராளம். 

வீரதீர சூரன் என்ற படத்தில் சூரி நடித்ததற்காக  சம்பளம் ரூ.40 லட்சத்துக்குப் பதில், சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். அந்த நிலத்துக்காக இருவரும் தன்னிடம் இருந்து 2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக போலீசில் நடிகர் சூரி புகார் செய்தார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தனது புகார் மீது போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி நடிகர் சூரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா சதி செய்ததற்கான ஆடியோ பதிவு மற்றும் ஆதரங்களை தாங்கள் வைத்திருப்பதாக் கூறினார். இதை விசாரணை அதிகாரியிடம் மனுதாரர் ஒப்படைக்கலாம், அதன் மீது போலீசார் விசாரிக்க தயாராக உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சூரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறி வழக்கை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தார். சூரிக்கு விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார் சூரி. கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் துவங்கவுள்ளது என்ற செய்தி வெளியானது. 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூரி. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறதாம். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியானது.