சின்னத்திரை வழியாக மக்களின் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தனது கடின உழைப்பால் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிகட்ட VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அயலான ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முதல் முறை சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ப்ரின்ஸ். சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா ரிபோஷப்கா கதாநாயகியாக நடிக்கும் ப்ரின்ஸ் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள,ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். தமன்.S இசையமைத்துள்ளார்.

சாந்தி பிலிம்ஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து வழங்க, கோபுரம் சினிமாஸ் வெளியிடும் ப்ரின்ஸ் திரைப்படம்  தீபாவளி வெளியீடாக இன்று அக்டோபர் 21ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸாகியுள்ளது இந்நிலையில் ரசிகர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ப்ரின்ஸ் திரைப்படத்தின் FDFS முதல் காட்சியை மிகுந்த உற்சாகத்தோடு கண்டு ரசித்தார்.

தனது மனைவி ஆர்த்தியுடன் ப்ரின்ஸ் திரைப்படத்தை காண வந்த சிவகார்த்திகேயனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் திரையரங்கு அதிரும் வகையில் ஆரவாரப்படுத்தினர். மேலும் படத்தில் இடம் பெற்ற பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வரும் சமயத்தில் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று ரசிகர்களுடன் கையசைத்து உற்சாகமாக படம் பார்த்தார்.