தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிலம்பரசன்.TR கூட்டணியில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பத்து தல படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சிலம்பரசன்.TR முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் சிலம்பரசனின் தந்தையும் தமிழ் சினிமாவின் முன்னணி திரை கலைஞருமான T.ராஜேந்தர் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது தந்தையின் உடல்நலம் குறித்து நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,
எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். 
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.

நன்றி,
உங்கள் அன்புள்ள,
சிலம்பரசன் TR

என தெரிவித்துள்ளார். திரையுலகில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்த T.ராஜேந்திர் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.