சேனாபதியாக மிரட்டும் உலகநாயகன் கமல்ஹாசன்... சுதந்திர தினத்தில் இந்தியன் 2 சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர்! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர்,shankar shared photo of kamal haasan as senapathy from indian 2 movie | Galatta

இந்திய நாடே கொண்டாடும் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து உலக நாயகன் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரத்தின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது பம்பரமாக சுழன்று உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். 64 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் என்றும் குறையாத அதே வேகத்தோடு ஒட்டு மொத்த இந்திய திரையுலகிற்கும் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக தயாராகும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் முன்னணி இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தனது 233வது திரைப்படமாக உருவாகும் KH233 படத்தில் உலக நாயகன் நடிக்க இருக்கிறார். அதன் பின் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்திற்கான திரைக்கதை வசனங்களையும் எழுதும் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பணிகளை தொடங்கினார். 

முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படம் கமல்ஹாசன் அவர்களுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் இயக்குனர் ஷங்கர், சேனாதிபதி கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இருக்கும் புத்தம் புதிய புகைப்படம் ஒன்றை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் மிரட்டலான இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#INDIAN2 pic.twitter.com/rhStm6ISLD

— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2023