விஜய் டிவியின் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" பிரம்மாண்டமான இறுதிப் போட்டி! வெற்றியாளருக்கு காத்திருக்கும் ரொக்கப் பரிசு

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி,vijay tv in thamizh pechu engal moochu grand finale | Galatta

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாகவும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட் சேனலாகவும் திகழும் விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களிடையே தமிழின் பெருமையை பேசும் வகையில் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி தான் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தற்போது மீண்டும் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழின் பெருமையை பேசி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிறைவு சுற்றில் அருண், பிரிட்டோ, கார்த்திக் ராஜா, ராகவேந்திரன் மற்றும் நாராயணன் கோவிந்தன் ஆகிய ஐந்து பேர் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இந்த நிறைவு சுற்று குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 

ஞாயிறு தோறும் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகிவரும் பெருமைமிகு நிகழ்ச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.
தமிழகத்தின் மக்களிடையே நிலவும் தமிழ் மொழியின் மீதான பற்று மற்றும் தமிழ் உணர்ச்சியை மேலோங்கச்செய்ய ஸ்டார் விஜய் அணைத்து விதத்திலும் முக்கியத்துவம் அளித்துவருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என்ற தலைப்பில் மதிப்புமிக்க இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்பு நேயர்களுக்கு அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கண்டுபிடிப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டிருந்தது. திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை என பல இடங்களில் திறமையான தமிழ் சொற்பொழிவாளர்களுக்காக ஸ்டார் விஜய், மாநிலம் முழுவதும்
தீவிர தேர்ச்சியை நடத்தியது. இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3000திற்கும் மேற்பட்ட திறமையாளர்கள் கலந்து கொண்டனர், அவர்களில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில், முதல் இருபத்தியெட்டு போட்டியாளர்கள் இந்த மேடைக்கு வந்து அவர்களது பேச்சுத்திறனை மக்களுக்கு முன் உரையாற்றி பெயர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களான டாக்டர் ஜி.ஞானசம்பந்தம் மற்றும் பர்வீன் சுல்தானா போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள்/ சொற்பொழிவாளர்கள் நடுவர்களாக இடம்பெற்றுவந்தனர். இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் அனிதா சம்பத் தொகுத்து வழங்கிவந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தமிழ் மொழிக்கு மரியாதை மற்றும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், நிகழ்ச்சியைப் பற்றி சில வார்த்தைகள் பேசினார் என்பது பெருமைமிகு செயலாகும்.
நாளை காலை 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஒளிபரப்பாகும். சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இது ஒளிபரப்பாகிறது. பிரம்மாண்ட இந்த மேடையின் இறுதிச்சுற்று போட்டியிடும் 5 போட்டியாளர்கள் அருண், பிரிட்டோ , கார்த்திக்ராஜா , ராகவேந்திரன், நாராயணன் கோவிந்தன் ஆகியோர். நிகழ்ச்சியில் வெல்லும் போட்டியாளருக்கு ரொக்கப்பரிசு காத்திருக்கிறது.
இந்த இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளர் சுகி சிவம், திருவாளர் சுப வீரபாண்டியன், பாடலாசிரியர் பா விஜய், எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் சல்மா ஆகியோர் கலந்துகொள்வர். நாளை காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த இறுதிப்போட்டியை காணாதவறாதீர்கள்.  

என தெரிவிக்கப்பட்டுள்ளது.