இந்திய திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 2.O.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய்குமார் இணைந்து நடித்த 2.O திரைப்படத்தை தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தை தொடங்கினார்.

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து தொடர்ந்து பல காரணங்களால் இந்தியன் 2 திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் ஷங்கர். தமிழில் மெகா ஹிட்டாக அந்நியன் திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்காக நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கு முன்பாக தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும்  #RC15 திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய S.தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் #RC15 திரைப்படம் பூஜையோடு இன்று தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பூஜையில் முன்னணி இயக்குநர் S.S.ராஜமௌலி, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் செய்து படத்தை துவக்கி வைத்தார். WE ARE COMING என அசத்தலான #RC15 போஸ்டரும் வெளியானது. தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.