பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனுக்கு ஆதராவக பேசிய சீமானை, மக்கள் நீதி மய்யம் கட்சி மகளிரணி மாநிலச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் பாலியல் வீடியோக்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கட்சிக்குள் நுழையும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ராகவன் ஈடுபட்டதாக” குற்றஞ்சாட்டு எழுந்தது.

அத்துடன், “வீடியோ காலில் பேசிக்கொண்டே ராகவன், சுய இன்பம் மேற்கொண்டது” அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இந்த வீடியோ வெளியான உடன் ராகவனை கைது செய்யக் கோரி, காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி புகார் அளித்தார். மேலும், அவருக்கு எதிராக மிக கடுமையாக அவர் விமர்சனம் செய்தார்.

அப்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ராகவன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “ஊர், உலகத்தில் பண்ணாததையா ராகவன் செய்துவிட்டார் என்றும், அவரோட பிரைவசி திருடி வெளியிடுபவர்கள் தான் அசிங்கப்பட வேண்டும்” என்று, ராகவனுக்கு ஆதராவகவே அவர் பேசினார்.

இதனையடுத்து, சீமானை மிகக் கடுமையாக விமர்சித்து ஜோதிமணி, இது குறித்து தனது கண்டன அறிக்கையையும் அவர் வெளியிட்டார். 

அதன் தொடர்ச்சியாக, ஜோதிமணியின் இந்த கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், “ஜோதிமணி இவ்வளவு பேச வேண்டியது இல்லை என்றும், ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ” என்றும், மிகவும் தரம் தாழ்ந்து ஒருமையில் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி மகளிரணி மாநிலச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் கண்டன அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “பல்வேறு சமூகத் தடைகள் காரணமாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய முன்வரும் மாதர்களின் சதவிகிதம் ஏற்கெனவே மிகக் குறைவு” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“அப்படிப்பட்ட சூழலில், துணிந்து அரசியல் களத்திற்கு வந்த மகளிருக்குப் பாலியல் தொந்தரவு தரும் அரசியல்வாதிகள் ஒரு புறம், அப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதோடு, பெண்களுக்காகக் குரல் எழுப்பும் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ‘செத்துப் போ’ என்று பொது வெளியில் கூறும் அரசியல் தலைவர் மறுபக்கம்” என்று, தனது வேதனையை தெரிவித்து உள்ளார்.

மேலும், “இவையெல்லாம் மகளிரை இழிவுபடுத்தும் செயலென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றும்,  பெண்களின் சுதந்திரச் சிறகொடிக்கும் இது போன்ற கொடுமைகளை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்றும், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

குறிப்பாக, “வீரம் எனப் பொருள் படும் ஆண்மை, மாதரை அடிமைப்படுத்தவோ அவர்களைச் சீரழிக்கவோ கொடுக்கப்படும் உரிமைப் பத்திரம் அல்ல என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும்” என்றும், சீமானுக்கு அவர் அறிவுரை வழங்கி உள்ளார். 

“கருவிலேயே சிதைக்கப்படும் கொடுமைக்கு எதிராகப் போராடிப் பிறந்து, இறப்பு வரை எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு வாழும் மரியாதைக்குரிய மகளிரின் கண்ணியம் காக்கப்பட, உரிமைகள் வென்றெடுக்கப்பட மக்கள் நீதி மய்யம் என்றும் குரல் கொடுக்கும்” என்றும், சினேகா மோகன்தாஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.