“ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை இந்தியாவில் கொண்டுவரப் பிரதமரிடம் அறிவுறுத்தப்படும்” என்று,   மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறி உள்ளதால், இந்த சட்டம் இந்தியாவில் விரைவில் அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அந்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், முற்றிலும் குறைந்திருந்த பிறப்பு விகிதத்தை மீண்டும் அதிகரிக்க, குழந்தைகள் பெறும் எண்ணிக்கையை 2, 3 என தற்போது கூட்டியிருக்கிறது சீனா அரசு.

அத்துடன், உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியில் இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில், ஒவ்வொரு தம்பதியினரும் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எந்த கட்டுப்பாடுகளும் இங்கு இல்லை. அதனால், கடந்த பல தலைமுறைகளுக்கு முன்பாக, 20 குழ்தைகள் கூட பெற்றுக்கொண்ட குடும்பங்கள் எல்லாம் நமது இந்தியாவில் இருந்தார்கள். 

ஆனால், தற்போது இது முற்றிலுமாக குறைந்து 2 குழந்தைகள் பெற்றெடுப்பது என்ற அளவில் இந்தியாவில் சராசரியாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, “ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் மசோதாவைக் கொண்டு வர பிரதமரிடம் விரைவில் கோரிக்கை வைக்கப்படும்” என்று, கூறினார்.

“இந்தியாவில், வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

“ 'ஒரு குழந்தை கொள்கையை” இந்தியக் குடியரசு கட்சி ஆதரிப்பதாகவும், இந்த கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமாக இந்திய மக்கள் தொகையை மத்திய அரசால் குறைக்க முடியும்” என்றும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெளிப்படையாகவே கூறினார்.

மேலும், “இதற்கான மசோதாவைக் கொண்டு வரவேண்டி எழுத்துப்பூர்வ கோரிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், கட்சி சார்பில் இதற்கான சட்ட முன் வடிவு பிரதமரிடம் வழங்கப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பிரகலாத் சிங் பட்டேல் இதே மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், பலரின் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா அப்போது வாக்கெடுப்புக்குக் கூட வராமல் முடங்கிப்போனது.

தற்போது, மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே இந்த மசோதாவுக்கு உயிர் கொடுக்க உள்ளதால், இந்தியாவில் “ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டம்” விரைவில் அமல்படுத்தப்படும் என்றே கூறப்படுகிறது.