தமிழ் திரைஉலகின் மூத்த பாடலாசிரியரான புலவர் புலமைப்பித்தன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கதாநாயகனாக நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நிறைய சிறந்த பாடல்களை எழுதி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த தமிழக சட்டமன்றத்தின் அரசவை கவிஞராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எம்ஜிஆர்-ன் குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன்  ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சிவகுமாரின் ரோசாப்பூ ரவிக்கைகாரி, K.பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் , இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு, மணிரத்னத்தின் நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பணக்காரன், நான் சிகப்பு மனிதன், ஊர் காவலன் ஆகிய படங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் பாலாவின் நந்தா, சீயான் விக்ரமின் காசி, வைகைப்புயல் வடிவேலுவின் இம்சை அரசன்  23-ம் புலிகேசி என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் திடீரென இன்று காலமானார். 

உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த புலவர் புலமைப்பித்தன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு வயது 85. புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழ் திரையுலகமும் பல கோடி தமிழர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.