DD ரிட்டன்ஸ் தொடரந்து சந்தானத்தின் அடுத்த காமெடி ட்ரீட் "கிக்" படம் ரெடி... ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சந்தானத்தின் கிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது,santhanam in kick movie release date announcement | Galatta

தொடர்ந்து நகைச்சுவை ட்ரீட் கொடுத்து வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் கிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நட்சத்திர காமெடியனாக கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்கிய சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் குளுகுளு மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்கான ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட திரைப்படங்கள் சந்தானம் நடிப்பில் வெளிவந்தன.

இந்த வரிசையில் கடைசியாக சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சந்தானத்தின் முந்தைய ஹாரர் காமெடி திரைப்படங்களான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் வரிசையில் வெளிவந்த இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகி வரும் மற்றொரு நகைச்சுவை படமான இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் வீர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் சந்தானம் நடிப்பில் அடுத்த காமெடி ட்ரீட்டாக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கிக். பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிக் திரைப்படம் சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஹீரோவாக 15வது திரைப்படமாகும். கிக் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கலகலப்பான காமெடி என்டர்டெய்னராக ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகியிருக்கும் கிக் திரைப்படத்திற்கு, சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பே கிக் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. தொடர்ந்து தற்சமயம் கிக் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகினறன.

சமீபத்தில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து சந்தானத்தின் திரைப்படங்களின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது கிக் திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை பட குழுவினர் அறிவித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சந்தானத்தின் திரைப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

And the big news is out - #KICK 🤞 releasing on the big screens on the 1st of September 🥳

Gear up for the celebration of laughter!@iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms @johnsoncinepro @saregamasouth #கிக் #SantasKick pic.twitter.com/LfeVm1Y5eS

— Fortune films (@Fortune_films) August 11, 2023