பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் ராதே. வெடரன் என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் அக்டோபர் மாதத்தில்தான் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி ரூபாய்க்கு சல்மான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இது திரையரங்க உரிமையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஏனென்றால், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ராதே படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுவிடுமோ எனக் கருதினார்கள். இதனால், ராதே வெளியீடு தொடர்பாகக் குழப்பம் நீடித்து வந்தது. இன்று (ஜனவரி 19) அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சல்மான் கான்.

அந்த அறிக்கையில் சல்மான் கான் கூறியிருப்பதாவது : அத்தனை திரையரங்க உரிமையாளர்களுக்கும் பதில் சொல்ல நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். இந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய முடிவு. திரையரங்க உரிமையாளர்கள் என்ன மாதிரியான நிதிப் பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ராதே படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலமாக அவர்களுக்கு உதவ நினைக்கிறேன்.

அதற்குக் கைமாறாக, ராதே படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் மீது உச்சபட்ச அக்கறையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். படம் ஈகைத் திருநாள் அன்று வருவதாகக் கூறியிருந்தோம். 2021 ஈகைத் திருநாள் அன்று படம் வெளியாகும். ராதே திரைப்படத்தை இந்த வருடம் ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள். நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று அறிக்கையில் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் ரிலீஸின் போது தளபதி விஜய் எடுத்த முடிவு போல் சல்மான் கான் முடிவெடுத்துள்ளார் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர் திரை ரசிகர்கள்.