பாலிவுட் உலகில் நடிகர் ரன்பீர் கபூருக்கென ஏராளமான ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகன் ஆவார். 2007-ம் ஆண்டு சவாரியா என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர், ராக்கெட் சிங், ராஜ்னீதி, அஞ்சனா அஞ்சானி, சில்லர் பார்ட்டி, பார்ஃபி, பிகே என பல வெற்றி படங்களில் நடித்தார். 

சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையான சஞ்சு படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். தற்போது ஷம்ஷேரா, பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பிரச்னைகளுக்கு பிறகு இதன் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் கேத்ரினா கைஃப் ஆகிய நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்ட ரன்பீர் சிங், இப்போது நடிகையும் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான நடிகை ஆலியா பாட்டை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக ஒரு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பார்க்க முடிகிறது. ரிஷி கபூர் மரணத்தின் போது கூட அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்ட குறைவான நபர்களில் ஆலியாவும் ஒருவராக இருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல், ஜூனைத் ஷா காலமானார். மாரடைப்பு காரணமாக ஶ்ரீநகரில் உள்ள வீட்டில் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இதை காஷ்மீரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் யூசுப் ஜமீல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரைச் சேர்ந்தவரான இவர், மும்பையில் தங்கி மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் சேர்ந்தும் படித்துள்ளார். ரன்பீர் கபூரின் சாயலை அப்படியே கொண்டிருந்த அவரது புகைப்படத்தைக் கண்டு, மறைந்த நடிகர் ரிஷி கபூரே ஆச்சரியப்பட்டார். 

சில ஆண்டுகளுக்கு முன் ரன்பீர் போல ஸ்டைலான போட்டோஸ் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனால் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜூனைத் ஷாவுக்கு ரசிகர்கள் அதிகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. லாக்டவுனில் தொடர்ச்சியாக ஏற்படும் திரைப்பிரபலங்களின் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.