குழந்தைகள் க்யூப் விளையாட்டின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அதே விளையாட்டை ஓவியமாக வரைந்து சாதித்து வருகிறார் அத்வைத் என்ற கேரளாவைச் சேர்ந்த சிறுவன். ஒன்பதாவது படிக்கும் மாணவர். இவர் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

இதற்காக 300 ரூபிக்ஸ் க்யூப்களைப் பயன்படுத்தியுள்ளார் அத்வைத். ரஜினிகாந்தின் புகைப்படம் வரைந்து தனது டிவிட்டரில் வெளியிட்ட அத்வைத், ரூபிக்ஸ் க்யூப்ஸுடன் உருவப்படங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் இந்த உருவப்படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று ரஜினிகாந்தின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் பலரும் இதை ஷேர் செய்து அத்வைதை பாராட்டவே விஷயம் ரஜினிக்கும் சென்றுள்ளது. உடனே அவரின் விவரங்களை பெற்று வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார் ரஜினிகாந்த். அதில், சூப்பர். சிறப்பான படைப்பு அத்வைத். இறைவன் ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ என்று தனக்கே உரிய ஸ்டைலில் பேசி பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். இந்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாக இருக்கிறது.