வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளை திருவிழாவாக மாற்ற வருகிறது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம். ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், ஐக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான், சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் 

இயக்குனர் சிவா இயக்கத்தில் , சன் பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக இன்று அண்ணாத்த படத்தின் முதல் பாடலாக “அண்ணாத்த.. அண்ணாத்த..” பாடல் வெளியானது. இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பாடகரான S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் கடைசி பாடலாக வெளிவந்தது அண்ணாத்த பாடல்.  என்றென்றும் மக்கள் மனதில் இருக்கும் SPB அவர்களின் கடைசி பாடலாக வெளிவந்திருக்கும் அண்ணாத்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் மட்டற்ற மகிழ்ச்சியும் மறுபுறம் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் படங்களில் ஓப்பனிங் பாடல் என்றாலே SPB தான். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் குறித்து மிக நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.