தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பீம்லா நாயக். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷ்டியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக பீம்லா நாயக் திரைப்படம் தயாராகிறது.

இத்திரைப்படத்தில் மலையாளத்தில் நடிகர் பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்க பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ராணா டகுபதி நடிக்கிறார். மேலும் நடிகை நித்யா மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், பவர்ஸ்டார் பவன் கல்யாண், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில்,

அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

பவன் கல்யாண்
தலைவர், ஜனசேனா

என  புகழ்ந்துள்ளார். தமிழக முதல்வருக்கு, நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாணின் இந்த புகழாரம் தென்னிந்திய அளவில் வைரலாகியுள்ளது.