90 களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் இந்த தொடரை என்றும் எளிதாக மறந்திட மாட்டார்கள். திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்த திரைப்படங்களை அசால்டாக அடித்து நொறுக்கி காமெடி கதையாக மாற்றி கொடுக்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல திறைமையான கலைஞர்கள் இன்று திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். அதில் குறிப்பாக சந்தானம், யோகி பாபு சிறந்த உதாரணம்.
பல ஆண்டுகளுக்கு முன்புரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து மகிந்த லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி காலப் போக்கில் நிறைவடைந்தது. இடையே இந்த நிகழ்ச்சியில் நடித்தவர்கள் சிலர் சந்தானம் உதவியுடன் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர். அதன்படி ஜீவா, மனோகர், ஜாங்கிரி மதுமிதா, பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்களை இந்த நிகழ்ச்சி உருவாக்கி உள்ளது. 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிப்பரபான லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு நிகராக எந்த நிகழ்ச்சியும் இது வரை வரவில்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் லொள்ளு சபா குழுவினருடன் இணைந்து ஹிட் தொடர்கள் பாணியில் காமெடி நிகழ்சிகளை தயாரிக்க தொடங்கினர். அதன்படி நெட்பிளிக்ஸ் ல் ஒளிப்பரபாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்த பிரேக்கிங் பேட் இணைய தொடரை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அந்த தொடர் பாணியில் நய்யாண்டியுடன் லொள்ளு சபா குழுவினர் தயாரிப்பில் வீடியோ முன்னதாக வெளியானது. அந்த ஸ்பூப் வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெற்றி தொடரை சல்லி சல்லியாக நய்யாண்டி கவுண்டர்கள் மூலம் நொறுக்கியுள்ளது லொள்ளு சபா குழு.
தென்கொரிய இணையத் தொடரான 'ஸ்குவிட் கேம்' தொடர் லாக்டவுன் சமயத்தில் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று ஹிட் தொடராக அமைந்தது. ரசிகர்களின் வரவேற்பினால் இந்த தொடரை இந்திய மொழிகள் உட்பட பல நாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பியது நெட்பிளிக்ஸ். முதல் தொடரின் வெற்றியை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் ஸ்குவிட் கேம் சீசன் 2 தயாரிக்க முன் வந்துள்ளது.
குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் ரத்தம் தெறிக்கும் கொலைகளுடன் உருவாக்கப்பட்டது. சீரியஸாக சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இந்த இந்த தொடரை ‘கிட் கேம்’ என்ற பெயரில் லொள்ளு சபா குழுவினர் ஸ்பூப் பாணியில் நய்யாண்டி தனத்துடன் மறுஉருவாக்கம் செய்துள்ளர். இதில் ஜீவா, மனோகர், சுவாமிநாதன், சேஷு, உதயகுமார், உடுமலை ரவி, ஸ்வேதா உள்ளிட்ட பல லொள்ளு சபா பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நவீன யுகத்திற்கு ஏற்ப காமெடிகளையும் 2k கிட்ஸ் என்று சொல்லப்படுகிறது சம கால பதின்பருவ தலைமுறைகளை நய்யாண்டி தனத்துடன் சீண்டியும் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.