பாலிவுட் இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் வரிசையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸான பிட்ட கதலு ஆந்தாலஜியின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. இதன் டீஸர் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட் இயக்குனர்களான ஜோயா அக்தர், அனுரக் காஷ்யப், கரண் ஜோஹர் மற்றும் திபாகர் பானர்ஜி இணைந்து இயக்கிய நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரீஸ் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. வெப்சீரிஸ்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கவும் இந்த ஆந்தாலஜி மிகப்பெரிய காரணமாக அமைந்தது. 

பிரபல இயக்குனர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு கதையிலும் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, புமி பெட்னேகர், விக்கி கவுஷல், மணிஷா கொய்ராலா, நேகா தூபியா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததன் மூலம் அதன் வெற்றி பன்மடங்காக மாறியது. 

தற்போது வெளியாகி உள்ள ட்ரைலரில் நான்கு முன்னணி நடிகைகளான அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் நாக் அஷ்வின், நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி மற்றும் தேசிய விருது வென்ற தருண் பாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னணி இயக்குனர்கள் இணைந்து இந்த ஆந்தாலஜியை தெலுங்கு மொழியில் இயக்கி உள்ளனர். 

காதல், ஏமாற்றம், துரோகம், காமம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியான பிட்ட கதலு அடுத்த மாதம் காதலர் தினம் முடிந்த பிறகு பிப்ரவரி 19ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.