“அவள் என் காதலி, இனிமே நீ பேசக்கூடாது, அவளதான் பார்த்துக்கோ..” என்று, காதலன் மிரட்டிய நிலையில், “அடேய், அவள் என் பொண்டாட்டிடா..” என்று, கணவன் கதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன், அப்பகுதியில் மீனவராக வேலை பார்த்து வருகிறார். 

இவர், அப்பகுதியைச் சேர்ந்த அபிமுனிசா என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். 

அதனையடுத்து, இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதனையடுத்து, குடும்ப பிரச்சனை காரணமாக, அடிக்கடி கணவன் - மனைவிக்கு இடையே சண்டை வந்துகொண்டே இருந்தது. 

இப்படியாக, கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை வந்துகொண்டே இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் - மனைவி இருவரும் பிரிந்து உள்ளனர்.

அப்போது, மணிமாறனின் மனைவி அபிமுனிசா தனது கணவனை விட்டு பிரிந்த நிலையில், தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தார்.

இதனையடுத்து, கணவன் மணிமாறன் தனது மனைவியை தேடி அவரது அம்மா வீட்டிற்கு சென்று பல முறை தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்திருக்கிறார். 

ஆனால், அந்த பெண் விடப்பிடியாக கணவனிடம் குடும்பம் நடத்த செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன் பிறகு, கணவன் மணிமாறனுக்கு ஒரு அதிர்ச்சிக்கரமான தகவல் கிடைத்திருக்கிறது. 

அதாவது, “மனைவி அபிமுனிசாவுக்கும் -  திருவொற்றியூர் பூங்காவனபுரம்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளக் காதல் உறவு இருப்பது” மணிமாறனுக்கு தெரிய வந்திருக்கிறது.  

பின்னர், கணவன் மணிமாறனை பிரிந்த அபிமுனிசா, யுவராஜ் உடன் சென்று அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே வாழத் தொடங்கி உள்ளனர்.

இந்த தகவலை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த மணிமாறன், மீண்டும் தனது மனைவியைத் தேடிச் சென்று “தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வா..” என்று அழைத்திருக்கிறார். 

ஆனால், அவரது மனைவியோ “வர முடியாது..” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த கணவன், “அப்படி வர முடியாது என்றால், நம் குழந்தைகளாவது என்னிடம் கொடுத்துவிடு” என்று, கேட்டிருக்கிறார். 

ஆனால், அதற்கு “முடியாது” என்று அவரது மனைவி அபிமுனிசா, கூறியிருக்கிறார். 

குறிப்பாக, “நான் யுவராஜுடன் தான் வாழ்வேன் என்றும், குழந்தைகளையும் கொடுக்க மாட்டேன்” என்றும், அவரது மனைவி பிடிவாதமாக கூறியிருக்கிறார்.

இப்படியாக, சில நாட்கள் தனது மனைவியை, மணிமாறன் “குடும்பம் நடத்த வரச்சொல்லி” தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். 

இந்த நிலையில் தான், கணவின் தொல்லை தாங்க முடியாமல் அவரது மனைவி, தனது காதலனிடம் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமாறன் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் தனது மீன்பிடி வலைகளை சரி செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, கடும் மது போதையில் தனது நண்பன் ராம்குமாருடன் அங்கு வந்த காதலன் யுவராஜு, “இனி, நீ அபிமுனிசாவிடம் பேசக்கூடாது. அவள் என் காதலி என்று சொல்லி, வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் மணிமாறன், “அடேய், அவள் என் பொண்டாட்டிடா” என்று கூறி, அவரிம் வாக்குவாதம் செய்து, சண்டைப் போட்டிருக்கிறார்.

அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த இந்த கடுமையான வாக்குவாதத்தில் காதலன் யுவராஜ் மற்றும் அவரது நண்பன் ராம்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து, மணிமாறனை கடுமையாகத் தாக்கிவிட்டு சுத்தியலால் மணிமாறன் தலையில் அடித்திருக்கிறார்கள். 

இதில், பலத்த காயம் அடைந்து மணிமாறன் அலறி துடித்த நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்த நிலையில், யுவராஜ் மற்றம் ராம்குமார் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர். பின்னர், மணிமாறனை மீட்ட அவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவர்களை தேடி வந்த நிலையில் தற்போது மனைவியின் காதலன் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளியான ராம்குமார் மற்றும் மனைவி அபி முனிசா ஆகிய 3 பேரையும்  போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.