நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.

இயக்குனர் வினோத் ராஜ் எழுதி இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் இணைந்து நடித்துள்ளனர். விக்னேஷ் கும்முளை மற்றும் ஜெய.பார்த்திபன் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ள கூழாங்கல் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்பட்ட கூழாங்கல் திரைப்படம், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான டைகர் விருது பெற்றது. தொடர்ந்து தற்போது ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக  ஹிந்தியில் “சர்தார் உத்தாம்” & “ஷெர்னி” குஜராத்தியில் “செல்லோ ஷோ”, மலையாளத்திலிருந்து “நயட்டு” ஆகிய படங்களுடன் “மண்டேலா” மற்றும் “கூலாங்கல்” ஆகிய தமிழ்ப் படங்களும் ஆஸ்காருக்காண பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றன. இந்நிலையில் 15 நடுவர்கள் கொண்ட இந்திய திரைப்பட கூட்டமைப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் பார்வையிடப்பட்டது.

இதில் கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நுழைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் போட்டியில் கலந்துகொள்ளும் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் வெல்ல வாழ்த்துவோம்.